• Mon. Jan 20th, 2025

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்றி, லாரி பேட்டை காய்கறி மார்க்கெட்டுகள் கொண்டுவரக் கூடாது

BySeenu

Dec 30, 2024

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டத்தின் போது, அதிமுக கவுன்சிலர்கள் கூட்ட அரங்கின் வெளியே 50 கோடிக்கு மேல் செலவு செய்த வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்றி அங்கு லாரி பேட்டை காய்கறி மார்க்கெட்டுகள் கொண்டுவரக் கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி பாரம்பரிய விக்டோரியா ஹாலில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின் போது, பல்வேறு பொருள்கள் விவாதிக்கப்பட்டன. கூட்டம் தொடங்கியது முதலே பல்வேறு கோரிக்கைகளை வைத்து அதிமுக 47 ஆவது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பி வந்தார். ஒரு கட்டத்தில் மற்ற கவுன்சிலர்களும் கோரிக்கைகள் வைத்து கொண்டு இருந்த போது, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்ற கவுன்சிலர்களுக்கும் பதில் கூறிவிட்டு, உங்களிடம் வருகிறேன் என கூறினார். இதனிடையே திமுக கவுன்சிலர்களும் இடைமறித்து, கூட்டம் தொடங்கியது முதலே அதிமுக கவுன்சிலர் மற்றவர்களை பேசவிடாமல் அவரை அதிக நேரம் எடுத்து கொள்வதாக குற்றச்சாட்டி வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் வாக்குவாதம் முற்றியபோது அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் , ஷர்மிளா ஆகிய மூவரும் மேயர் இருக்கைக்கு அருகே தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது திமுக கவுன்சிலர்களும் அரங்கத்திற்கு முன்பு சென்று வாக்கவாதம் செய்து, பின்னர் சமாதானம் செய்தனர். இருப்பினும் தொடர்ச்சியாக கூச்சல் குழப்பம் நிலவி வந்த நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் ஒரு கட்டத்தில் முழக்கங்கள் எழுப்பியவாறு கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்தனர். சுமார் 50 கோடிக்கு மேல் செலவு செய்து விட்ட வெள்ளலூர் பேருந்து நிலையத்தை கைவிடாமலும் அதே சமயம் அங்கு லாரி பேட்டை காய்கறி பல மார்க்கெட்டுகள் கொண்டுவரக் கூடாது எனவும், வலியுறுத்தி பதவிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.