நேர்மையின் அடையாளமாகவும் முதல்வராக இருக்கும் போதே பதவியை தூக்கி எறிந்தவரும்ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம், ஒன்பது ஆண்டுகள் முதல்வர் என்று உண்மையின் உறைவிடமாக வாழ்ந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய பெயரையும் ,அவரை களங்கப்படுத்தும் விதமாக அவரை வசை பாடி கொண்டிருக்கின்ற வர்களையும், நாடார் சமுதாயத்தையும் கேவலமாக பேசி இருக்கின்ற மை இந்தியா யூடியூப் சேனல் நடத்திக் கொண்டிருக்கின்ற முகமது முக்தார் அப்பாஸைக் கண்டித்தும் அவர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலை முன்பு நாடார் மஹாஜன சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மண்டலத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் அறிவு ஒளி ஆண்டவர் முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் ,மாவட்டத் தலைவர் மாரிக்கணி மற்றும் விருதுநகர் சிவகாசி திருத்தங்கள் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருப்புக்கோட்டை உள்ளிட்ட விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து முகமது முக்தாரின் கொடும்பாவியை எரிக்க முற்பட்டனர். ஆனால் போலீசார் அதற்கு அனுமதி மறுத்ததை தொடர்ந்து அனைவரும் ஊர்வலமாக சென்று விருதுநகரிலிருந்து சாத்தூர் அருப்புக்கோட்டை செல்லும் முகரோட்டில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் சமரசத்திற்கு பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. போராட்ட ஏற்பாடுகளை மண்டலசெயலாளர் கனகரத்தினம் செய்து இருந்தார்.
பின்னர் நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் புத்தரை கைது செய்ய விருதுநகர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ராமராஜிடம் புகார் மனு அளித்தனர்.




