• Sun. Sep 8th, 2024

ஆளுநருக்கு எதிராக போராட்டம்- அன்புமணி ராமதாஸ்

ByA.Tamilselvan

Mar 6, 2023

ஆளுனருக்கு எதிரான மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் அன்புமணி ராமதாஸ் தகவல்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்து அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சத்தை இழந்த சென்னை கே.கே. நகரை அச்சக உரிமையாளர் சுரேஷ் என்பவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த மனைவியும், இரு குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். அவர்களுக்கு எனது ஆறுதல். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் இருவர் பலியாகியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 47-ஆவது தற்கொலை இது. புதிய சட்டம் இயற்றப்பட்ட 139 நாட்களில் 18 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ’ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை; மற்றவர்களை காப்பதற்காவது அதை தடை செய்யுங்கள்’ என்று சுரேஷ் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த எதார்த்தமும், வலியும் ஆளுனருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் உரைக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு சட்டம் இயற்றி 5 மாதங்கள் ஆகும் நிலையில், அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுனர் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த மக்களையும் அவமதிக்கும் செயல். இதைவிட மனிதநேயமற்ற நடவடிக்கை எதுவும் இருக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளுனருக்கு எதிரான மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *