

10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டில் தேவர் சமூகத்தினருக்கு துரோகம் இழைத்த எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாநாட்டிற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்ய கோரியும் மதுரை முனிச்சாலை பகுதியில் தேவரின் கூட்டமைப்பினர் சார்பில் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ,நெல்லை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் முக்குலத்தோர் எழுச்சி கழகம், பசும்பொன் தேசிய கழகம், தென்னாட்டு மக்கள் கட்சி, பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம், முக்குலத்தோர் தேசிய கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தென் மாவட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை தோற்கடிக்க வேண்டும் எனவும், தென் மாவட்டங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி எங்கு சென்றாலும் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து தோற்கடித்து பாடம் புகட்டுவோம் என கூறி பேசினர்.
