உசிலம்பட்டியில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளி விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்களின் நிலை குறித்தும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இயங்கும் பள்ளி வாகனங்களை உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, உசிலம்பட்டி கோட்டாச்சியர் சண்முக வடிவேல், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்.

30க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களில் ஆவணங்கள், ஓட்டுநர்கள், அவரச வழி, கண்காணிப்பு கேமரா, இருக்கைகள், படிக்கட்டுகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையிலான வீரர்கள் ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.