• Sat. Apr 27th, 2024

நடிகர் விஜயகாந்த் மறைவு குறித்து பிரதமர் மோடி உருக்கம்..!

Byவிஷா

Jan 3, 2024

நேற்று திருச்சியில் பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர், நடிகர் விஜயகாந்த் மறைவு குறித்து, எனது அருமையான நண்பரை இழந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிச.28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். டிச. 29ம் தேதி விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது அஞ்சலியை நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளிப்படுத்தினர். இந்த சூழலில் திருச்சியில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பேசியிருந்தார். பிரதமர் கூறியதாவது, 2023ம் ஆண்டு அதிக வலிகளை தந்த ஆண்டாக உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இழந்துள்ளோம். அவர் திரையில் மட்டும் கேப்டன் அல்ல, அரசியலிலும் கேப்டன் தான்.
தனது திரைப்படங்கள் வாயிலாக மக்களின் இதயங்களை வென்றவர் விஜயகாந்த் எப்போதும் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுபவர். விஜயகாந்தை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அவரின் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது, மறைந்த தேதிமுக தலைவர் விஜயாகாந்த் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், சில நாட்களுக்கு முன்பு, நாம் பெரிதும் போற்றப்படும் மற்றும் மதிக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்தோம். விஜயகாந்தின் மறைவால் ஏராளமான மக்கள் தாங்கள் ரசித்துப் போற்றிய நடிகரையும், பலர் தங்களது பாசத்திற்குரிய தலைவரையும் இழந்திருக்கிறார்கள். ஆனால் நான் எனது அன்பான நண்பரை இழந்துள்ளேன். அவர் உண்மையிலேயே அனைவருக்கும் ஒரு கேப்டனாக இருந்தார்.
பிறருக்கு தனது வாழ்க்கையை வாழ்ந்தவர். தனிப்பட்ட முறையில், கேப்டன் மிகவும் எனக்கு அன்பான நண்பராக இருந்தார். அவருடன் நான் நெருக்கமாகப் பழகிய பல சந்தர்ப்பங்கள் உள்ளது. கேப்டன் விஜயகாந்த் பன்முக ஆளுமை கொண்டவர், இந்திய சினிமா உலகில், விஜயகாந்த் போல் ஒரு சில நட்சத்திரங்கள் மட்டுமே அழியாத முத்திரையை பதித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் தொடக்கத்திலிருந்து உச்சம் வரையிலான அவரது பயணம் வெறும் நட்சத்திர கதை மட்டுமல்ல, இடைவிடாத முயற்சி மற்றும் தளராத அர்ப்பணிப்பின் ஒரு சரித்திரம். அவரது பயணம் ஆர்வமும் விடாமுயற்சியும் கொண்டது. அவர் புகழுக்காக சினிமா உலகில் நுழையவில்லை. அவரது ஒவ்வொரு படமும் மகிழ்வித்தது மட்டுமல்லாமல், சமூக நெறிமுறைகளை எதிரொலித்தது. திரைப்படங்களில் அநீதி, ஊழல், தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்க்கும் கதாபாத்திரங்களில் நடித்தவர்.
சமூகத்தின் நற்பண்புகள் மற்றும் தீமைகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அவரது படங்கள் இருந்தன. மகத்தான புகழைப் பெற்ற பிறகும், உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகும், கிராம வாழ்க்கை மற்றும் பாரம்பரிய நெறிமுறைகள் மீதான அவரது காதல் நிலைத்திருந்தது. தமிழக அரசியலில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி என இரு தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தியபோது அவர் அரசியல் களத்தில் இறங்கினார். குறுகிய காலத்திலேயே பிரதான எதிர்க்கட்சித் தலைவராக ஆனார்.
2014 மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சிகள் கூட்டணியில் போட்டியிட்டு 18.5சதவீத வாக்குகளைப் பெற்றபோது நான் கேப்டனுடன் இணைந்து பணியாற்றினேன். 2014 தேர்தல் வெற்றிக்குப் பிறகு என்.டி.ஏ தலைவர்கள் சந்தித்தபோது சென்ட்ரல் ஹாலில் அவர் அடைந்த மகிழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது. எனவே, அனைவரின் முன்னேற்றம், சமூக நீதிக்கான விஜயகாந்தின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம் எனவும் பிரதமர் மோடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *