2026-ல் மக்கள் விரும்பும் கூட்டணி, அமைச்சரவையில் தே.மு.தி.க.வுக்கு அங்கம்! செங்கோட்டையன் குறித்து கருத்து கூற முடியாது, எங்கள் கட்சியின் இதுபோல் பல தடவை நடந்துள்ளது மக்கள் விரும்பினால் சூலூர் தொகுதியில் போட்டி பிரேமலதா பேட்டி

தே.மு.தி.க. சார்பில் கோவை மாவட்டம் சூலூர் பகுதிகளில் நடைபெற்ற கேப்டன் ரத யாத்திரையில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். சூலூர் அரசு மருத்துவமனையில் இருந்து சீரணி கலையரங்கம் வரை நடைபெற்ற இந்த ரத யாத்திரை நிறைவடைந்ததும், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது மேடைக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் நடித்த திரைப்படப் பாடலான ‘பாண்டியரே’ ஒலித்ததைக் கேட்டு, உற்சாக மிகுதியில் தொண்டர்களுடன் இணைந்து கைதட்டி பாடலை ரசித்தார்.

பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்றும், கூட்டணி ஆட்சி அமைந்தால், அதில் தே.மு.தி.க. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஆட்சியாக அது அமையும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய் கட்சிக்குச் சென்றது குறித்த கேள்விக்கு, அது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. இது போன்ற நிகழ்வு, தே.மு.தி.க. முதல்முறையாக போட்டியிட்ட போது சூலூரில் வெற்றி பெற்ற போதும் நடந்துள்ளது என்று பதிலளித்தார். சூலூர் தொகுதியில் பிரேமலதா நிற்பாரா என்ற கேள்விக்கு, கூட்டணி முடிவு செய்த பிறகு யார் நிற்கிறார்கள் என்று முடிவெடுக்க முடியும்; மக்கள் விரும்பினால் இந்தத் தொகுதியில் போட்டியிடுவேன்” என்றும் அவர் தெரிவித்தார்.








