உத்தரபிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி சாதுக்கள், துறவிகளின் பக்தி கோஷத்துடன் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கியது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மகா கும்பமேளா நிகழ்வு நடைபெறுவதால் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பிரக்யாரஜ்ஜுக்கு குவிந்தனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்ச்சி நடந்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். குறிப்பாக மகரசங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி, பவுஷ்ய பூர்ணிமா மற்றும் மகா சிவராத்திரி ஆகிய 5 தினங்கள் அமிர்த ஸ்நானத்துக்கு ஏற்ற தினங்களாக கூறப்படுகிறது. இந்த நாட்களில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக மவுனி அமாவாசை தினமான கடந்த ஜனவரி 29 ஆம் தேதி திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் அதிக பட்சமாக 8 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
அன்றைய தினம் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். 5 முக்கிய புனித தினங்களில் 4 தினங்கள் முடிந்து விட்டன. கடைசியாக மகா சிவராத்திரி தினம்தான் உள்ளது. அன்றைய தினம்தான் மகா கும்பமேளாவின் நிறைவு நாளாகும். அந்த வகையில் கடந்த 44 நாட்களாக நடந்து வந்த மகா கும்பமேளா, 45-வது நாளான மகா சிவராத்திரி தினமான இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது.
மகா கும்பமேளாவின் நிறைவு நாளான இன்று கங்கைக்கரையில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுகிறது. மகா சிவராத்திரி மற்றும் ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜ்ஜுக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நேற்றே அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 63.36 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு




