பிரசித்திபெற்ற பிரான்மலை ஸ்ரீ வடுக பைரவர் கோயிலில் ஜெயந்தன் பூஜை விழாவை முன்னிட்டு மதகுபட்டி கிராமத்தார்கள் ஆயிரகணக்கானோர் பால்குடம் எடுத்தும் கரும்பு தொட்டில் நாய் பொம்மைகள் காணிக்கை செலுத்தியும் வழிபாடு செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வடுக பைரவர் கோவிலில் சித்திரை ஜெயந்தன் பூஜை விழா ஸ்ரீ குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் வெகு விமரியாக நடைபெற்றது.

இந்திரன் மகன் ஜெயந்தன் மகாராஜா பெண்ணாசையால் சாபம் பெற்றார்.பிறகு யோக பைரவர் முன் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார். இதை நினைவு கூரும் வகையில் பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை வடுக பைரவர் கோயிலில் ஜெயந்தன் பூஜை விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் மதகுபட்டியில் உள்ள ராமர் ஆலயத்திலிருந்து தீபமேற்றி பால்குடத்தை துவக்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட பால்குடங்கள் முக்கிய வீதிகள் வழியே வலம்வந்து மலையேரத்துவங்கினர். சுமார் 500 அடி உயரமுள்ள மலையின் நடு பகுதியில் அமைந்துள்ள வடுக பைரவர் ஆலயத்தை வந்து அடைந்தனர்.
இத் திருவிழாவில் விவசாயம் செழிக்கவும் உலக மக்கள் நன்மை வேண்டியும் மதகுபட்டி கிராமத்தார்கள் ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்தும் குழந்தை பாக்கியம் கிடைக்க கரும்பு தொட்டில் எடுத்தும், வீட்டில் வளர்க்கப்படும் ஆடு மாடு மற்றும் கால்நடைகள் நலமுடன் இருக்க மண்ணிலால் செய்யப்பட்ட நாய் பொம்மைகள் எடுத்து ஸ்ரீ வடுக பைரவர் சாமிக்கு பக்தர்கள் எடுத்து வந்த பாலால் அபிஷேகம் செய்தும் காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர் . இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.