சிவகாசி ஆயுதப்படைப் பிரிவு மைதானத்தில் சிவகாசி உட்கோட்ட காவல்துறைக்குச் சொந்தமான உமா மகேஸ்வரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலில் அம்மனுக்கு உகந்த ஆடிமாதத் திருவிழா கடந்த 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 8-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை11- நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. காவல்துறைக்கு சொந்தமான கோவில்திருவிழா வென்பதால் விழா நாட்களில் அன்றாடம் உமா மகேஸ்வரி யம்மன், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட சப்பரத்தில் சர்வ அலங்காரத்துடன், சிவகாசி காவல் உட்கோட்டத்திற்கு ட்பட்ட அனைத்து காவல் நிலையத்திற்கும் ஒவ்வொரு நாளும் மண்டகப்படியில் எழுந்தருள்வது போல வருகை தந்து எழுந்தருளி காவல்துறையினருக்கு அருளாசி வழங்கி வருகிறார்.
காவல் நிலையத்தில் ஆஜரான அம்மனை பூத்தட்டு, பழ வகைகள், பூஜை பொருட்களடங்கிய படையலுடன், பயபக்தியோடு காவல்துறையினர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அர்ச்சகர்களின் ஆன்மீகப் பாடலோடு, மேளதாளத்துடன் உமா மகேஸ்வரியம்மனுக்கு சிறப்பு பூஜையோடு தீபாராதனை காண்பிக்கப்பட்டதை யடுத்து, காவல் நிலையத்தின் உள் வளாகம் முழுவதும் அர்ச்சகர்கள் தீபாராதனையுடன் வலம் வந்து பூஜை நடத்தினர்.

தொடர்ந்து அம்மனை மனமுருக வணங்கி வழிபட்ட காவல்துறையினருக்கு கோவில் சார்பாக மரியாதை செலுத்த தலையில் பரிவட்டம் கட்டி, பொன்னாடையுடன், மலர் மாலை யணிவித்த மரியாதையை அனைவரும் ஏற்றுக் கொண்டதுடன் பவ்யத்தோடு நெற்றியில் விபூதி பூசி, குங்குமம்மிட்டுக் கொண்டனர். அதிகாரத் தோரணை பொறுப்பிலுள்ள காக்கிச்சட்டைக்குள்ளும் ஒளிந்துள்ள ஆன்மீகத்தை வெளிப்படுத்திய காவல்துறையினரின் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பூஜை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றவுடன் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.