பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களை விதிகளை மீறி உறவினர்களிடம் பேச அனுமதித்த சம்பவத்தில் 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் நேற்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கினை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேலும் கடந்த 21ஆம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதில், விடுபட்ட குற்றப்பத்திரிகை நகல்களின் சில நகல்கள் 9 பேரிடமும் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் அளித்த 161,164 ஸ்டேட்மென்ட், ரகசிய வாக்குமூலத்தின் நகல்கள் கைதான 9 பேருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குற்றவாளிகள் இருந்த காவல் துறை வாகனம், கோவை சித்ரா விமான நிலையம் அருகே திடீரென நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, அங்கு காத்திருந்த குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களை சந்தித்து உரையாடினர். உறவினர்களிடம் அவர்கள் பேசிய பின்னர், அந்த வாகனம் சேலம் மத்திய சிறையை நோக்கி சென்றது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க வேண்டும் என்றால், முறையாக, நீதிமன்றத்தின் முன் அனுமதியைப்பெற வேண்டும். ஆனால், சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உறவினர்கள் சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களை விதிகளை மீறி உறவினர்களிடம் பேச அனுமதித்த சம்பவத்தில் 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட ஏழு பேரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தவும் சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.