• Tue. Mar 19th, 2024

கவிஞர் புலமைப்பித்தன் பேரன் நடிக்கும் எவன்

Byதன பாலன்

Mar 21, 2023

தமிழ் சினிமாவில் திரைக்கலைஞர்களின் வாரிசுகள் நடிப்பதுஇயல்பு. அந்த வகையில் தமிழ் திரையிசையில் மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை வழங்கிய கவிஞர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘எவன் ‘இது சம்பந்தமாகஅவரை சந்தித்தபோது 2009ம் ஆண்டுகளில் இரு சக்கர வாகன பந்தய வீரராக நான்இருந்தேன். அந்த காலகட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான இரு சக்கர வாகன பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன்.

அப்போது தமிழகத்தின் மிக இளம் வயது இரு சக்கர வாகன பந்தய வீரர் என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றேன்.இருசக்கர வாகனத்தில் பயணிப்பதும்.. இதில் சாகசம் செய்வதும் மனதிற்கு பிடித்த செயலாக இருந்தது. இதன் காரணமாக இந்த சாகச பயணத்தில் கின்னஸ் சாதனை ஒன்றையும் படைத்தேன்.

வீலிங் எனப்படும் ஒரு சக்கரத்தில் வாகனத்தை தொடர்ந்து 13 கிலோமீட்டர் வரை இயக்கி கின்னஸ் சாதனையும் படைத்தேன். இதன்பிறகு இரு சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபாட்டை குறைத்துக் கொண்டு, திரையுலகின் மீது கவனம் செலுத்த தொடங்கினேன்.
நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஜெயராவ் எனும் மாஸ்டரிடம் 2011 ஆம் ஆண்டில் நடிப்பு பயிற்சிக்காக இணைந்தேன்.அவரிடம் நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு, 2012 ஆம் ஆண்டில் இயக்குநர் ஜெயசீலன் இயக்கத்தில் தயாரான ‘பள்ளிக்கூடம் போகாமலே’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானேன்.அந்தத் திரைப்படம் 2016 ஆம் ஆண்டில் வெளியானது. தற்போது எவன் படத்தில் நடித்து முடித்துள்ளேன்
இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து ‘சாகாவரம்’ எனும் பெயரில் ஒரு திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதுடன், அதனை இயக்கியும் வருகிறேன். இந்தத் திரைப்படம் சைக்கோ த்ரில்லர் ஜானரில் தயாராகி வருகிறது.இதனைத் தொடர்ந்து தற்போது ‘ஆண்டனி'(ANTONY FILM ) எனும் பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் தயாராகிறது. இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறேன்.2014 ஆம் ஆண்டில் என்னுடைய தாத்தாவின் கனவை நனவாக்குவதற்காக லண்டனுக்கு சென்று அங்குள்ள ஃபிலிம் அகாடமியில் திரைப்பட உருவாக்கம் குறித்த கல்வியை கற்றேன்.நான் சிறுவனாக இருந்த போதிலிருந்து தாத்தாவுடன் தான் இருந்திருக்கிறேன். எனக்கு தாத்தா பாட்டி தான் எல்லாம். நான் இன்று திரையுலகில் கதாநாயகனாக.. இயக்குநராக… உயர்ந்திருக்கிறேன் என்றால் இது அவர்களின் கனவு. இருசக்கர வாகன பந்தய வீரராக வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது.

ஆனால் திரைத்துறையில் சாதனை படைத்த கலைஞராக உருவாக வேண்டும் என்பது என்னுடைய தாத்தா பாட்டியின் கனவாக இருந்தது. இதனை உணர்ந்து கொண்ட பிறகுதான் திரைத்துறை மீது கவனம் செலுத்தி, என்னை தகுதிப்படுத்திக் கொண்டு பயணிக்கிறேன்.மறைந்த புரட்சித் தலைவரே வியந்து பாராட்டிய உங்களுடைய தாத்தா புலமைபித்தன் குறித்து என்ற போதுநான் சிறிய வயதில் மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் கதைகளையும், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் மேதகு பிரபாகரனின் கதைகளையும் கேட்டு தான் வளர்ந்தேன்.நான் கேட்ட வேதம் இவர்களின் வரலாறுகள் தான். இன்றும் நான் புரட்சித் தலைவரின் தீவிர ரசிகன். இதனை சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

‘குடியிருந்த கோயில்’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘நான் யார்? நீ யார்?..’ என்ற பாடலை தாத்தா எழுதியிருந்தார். இந்த பாடலைக் கேட்ட புரட்சித் தலைவர், பாடலாசிரியரான தாத்தாவை நேரில் சந்தித்த போது வியப்படைந்தாராம்.இளம் வயதிலேயே இப்படி ஒரு பாடலை எப்படி வழங்க முடிந்தது? என்று ஆச்சரியப்பட்டு பாராட்டினாராம். இந்தப் பாடலை வாழ்க்கையில் அனுபவம் பெற்ற முதியவர் ஒருவர் எழுதியிருப்பார் என்று நான் நினைத்தேன் என்றாராம்.அப்படத்தை இயக்கிய இயக்குநர் கே.சங்கரிடம்.. எனது தாத்தாவை அறிமுகப்படுத்தியதற்காக புரட்சித்தலைவர் பாராட்டிக் கொண்டே இருந்தாராம்.தாத்தா, மேதகு பிரபாகரனை முதன்முதலாக புரட்சித் தலைவரிடம் அறிமுகம் செய்து வைத்த நிகழ்வைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார்.. புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,, பிரபாகரனுக்கு தாத்தா மூலமாக ஏராளமான நிதி உதவிகளை செய்ததையும் குறிப்பிடுவார்.

அடிப்படையிலேயே நான் பாடலாசிரியர் புலமைப்பித்தனின் பாடலுக்கு ரசிகன். ஆனால் நிஜத்தில் அவரது பேரனாக இருப்பது கூடுதல் பொறுப்புடன் கூடிய விவரிக்க இயலாத மகிழ்ச்சி.தாத்தா எப்போதும் என்னிடம் ஒரு விசயத்தை சொல்வதுண்டு. ‘வாழ்க்கையில் அனைவருக்கும் வெற்றி தோல்வி என இரண்டு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது.நீ நிச்சயமாக வெற்றி பெற்று தான் தீர வேண்டும் வேறு வாய்ப்பு இல்லை.’ என்பார். அவரின் இது போன்ற வார்த்தைகள் எம்மை எப்போதும் உத்வேகத்துடன் இயங்க செய்து கொண்டே இருக்கும்.நான் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வருகை தந்திருந்தால். என் மீதான எதிர்பார்ப்பு குறித்த அழுத்தம் எதுவும் இருந்திருக்காது. ஆனால் பிரபலமான பாடலாசிரியரின் பேரன் அதிலும் புரட்சித் தலைவரின் நம்பிக்கையும், ஆசியும் பெற்ற புலவர் புலமைப்பித்தனின் பேரன் என்றால் என் மீதான எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகம். அந்த பொறுப்பை உணர்ந்திருப்பதால் திரைத்துறையில் கவனமுடன் பயணிக்கிறேன்.

சினிமா என்பது மிக வலிமையான ஆயுதம். இதன் மூலம் படைப்பாளி எதை சொன்னாலும் பாமர ரசிகர்கள் முதல் மெத்த படித்த ரசிகர்கள் வரை நம்புவார்கள். அதனால் நல்ல விசயங்களை மட்டுமே சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அடிப்படையில் நான் ஒரு டீடோட்டலர். வாழ்க்கையில் ஒரு முறை கூட மது, புகை போன்றவற்றை தொட்டது கிடையாது. இந்த நல்ல பழக்கம் என்னுடைய தாத்தாவிடமிருந்து எனக்கு வந்தது. நான் எதிர்காலத்தில் பத்து அல்லது நூறு படங்களுக்கு மேல் நடித்து சிறந்த நடிகராக அடையாளப்படுத்தலாம். ஆனால் என்னுடைய வெற்றி என்பது.. என்னுடைய திரைப்படங்களை பார்த்து பத்து ரசிகர்களாவது நான் புகைப்பழக்கத்தை கைவிட்டேன்.. மது அருந்தும் பழக்கத்தை கைவிட்டேன்.. என சொல்லும் போது தான் வெற்றி பெற்றதாகவே உணர்வேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *