• Sat. Mar 22nd, 2025

பேரழகனே..,

நீ இல்லாமல்
நான் கடந்து போகும்
ஒவ்வொரு மணித்துளியும்
பாறையென கனத்துப்போகிறது..‌.

உந்தன் குரல் கேட்காது
என் கவிதை நந்தவனத்து
சொற்பூக்களும் சொற்பமாய்
விடுமுறை கேட்டு விடைபெறுகிறது…

வரிகளில் வண்ணத்தை பூசிடும்
வண்ணத்துப்பூச்சியும்
வழிமாறி பறக்கிறது
கனத்த இதயத்தோடு…

வெள்ளையடித்து
காத்திருந்த வெற்றுத் தாளும்
என்ன எழுதிவிடப் போகிறாய்?
என ஏளனத்தோடு கேட்கிறது…

நீயில்லாத கவிதை ஒன்றினை
எழுதிவிடுவது அத்தனை சுலபமானதல்ல
என என் பேனாமுனையும்
மௌனம் பூசியே மறைக்கிறது….
சீக்கிரம்
வந்து_விடேன்….
என் பேரழகனே..!

கவிஞர் மேகலைமணியன்