• Sun. May 5th, 2024

குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

Byவிஷா

Feb 28, 2024

பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வரும் நிலையில், இன்று குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று பிற்பகல் பல்லடத்தில் நடைபெற்ற “என் மண் என் மக்கள் யாத்திரை” நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்னர் நேற்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் வந்தடைந்த பிரதமர் மோடி தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை திறந்து வைத்தும், அடிக்கலும் நாட்டினார்.
அதன்படி ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே ரூ.550 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள புதிய ரயில்வே தூக்கு பாலத்தையும், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், 1,477 கோடியில் முடிக்கப்பட்ட வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை ஆகியவற்றை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மேலும், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 7,055.95 கோடி மதிப்பில் துறைமுக பணிகள், 265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 மேம்பாட்டு பணிகள், 124.32 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் உள்ளிட்டவற்றுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உடன் ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் எ. வ வேலு, எம்.பி கனிமொழி மற்றும் இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் உள்ளிட்டோர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *