
சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய போது, தீயணைப்பு துறையினரால் காப்பாற்றப்பட்ட பிளஸ் ஒன் மாணவன் குடும்பத்துடன் சென்று அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் கள்ளழகர் தரிசனம் செய்தனர். இந்த நிலையில் வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ் ஒன் மாணவர்கள் இருவர் உயிருக்கு போராடிய நிலையில் சோழவந்தான் தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவர் உயிரிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் இருந்த மற்றொருவனை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிளஸ் ஒன் மாணவன் ஒரு வார சிகிச்சைக்கு பின்பு இயல்பு நிலைக்கு திரும்பினார். இந்த நிலையில் தனது உயிரை காப்பாற்றிய சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தனது குடும்பத்துடன் நேரில் சென்று நன்றியை தெரிவித்தனர். நிலைய அலுவலர் நாகராஜன் முதலுதவி செய்த சரவணன் மற்றும் மதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
