• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு – முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மாணிக்க விநாயகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. பக்திப் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள் என 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

மயிலாடுதுறை அடுத்த வழுவூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகனாவார்.


கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான ‘தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார். திருடா திருடி, சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பருத்தி வீரன், வெயில், சந்திரமுகி, தூள் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

மாணிக்க விநாயகம் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபல திரைப்பட பாடகர் வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். தலைவர் கலைஞர் மீதும், என் மீதும் அளவற்ற அன்பை பொழிந்து, பெயரை போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இன்று காலையில் திருவான்மியூரில் வைக்கப்பட்டிருக்கும் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினார். மாணிக்க விநாயகம் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.