ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இன்று காலை 5:30 மணிக்கு ஜெய்பூரில் இருந்து சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் 14 நிமிடம் தாமதமாக 5.44 மணிக்கு தரை இறங்கியது.
அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 165 பயணிகள் இருந்த நிலையில் விமானி திறமையாக செயல்பட்டு ஓடுதளத்திலிருந்து வெளியே செல்லாத அளவிற்கு விமானத்தை இயக்கினார். கடுமையான முயற்சிக்கு பிறகு விமானம் நிலைநிறுத்தப்பட்டது.
உடனடியாக சென்னை விமான கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் விமானத்தை சூழ்ந்து கொண்டன அதுமட்டுமின்றி பயணிகள் இறங்குவதற்கு ஏதுவாக உடனடியாக வாகனம் கொண்டுவரப்பட்டு 165 பயணிகளும் எந்தவித பாதிப்பும் இன்றி வெளியே அழைத்து வரப்பட்டனர்.

அதனை தொடர்ந்து விமான நிலைய விசாரணை குழு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விமானத்தின் டயர் பழுதடைந்து இருந்ததா ஒடு தளத்தில் ஏதேனும் தடங்கல் இருந்ததா அல்லது தரை இறங்கும் போது வேகம் அதிகமாக இருந்ததா என்பது குறித்து தற்சமயம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் தரையிறங்கும் பொழுது விமானத்தின் டயர் வெடித்தது பயணிகளிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.