• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை மனு..!

தேனி மாவட்ட அனைத்து தொழிலாளர் துப்புரவு தொழிலாளர் சங்க, மாவட்ட செயலாளர் கே.பிச்சைமுத்து, தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:


நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக துப்புரவு பணியாளர்களின் நலன் கருதி, ரேன்ஸ் கரண்டி, மண்வெட்டி, தட்டு, சாக்கடை வாரும் கரண்டி மற்றும் கிளவுஸ் (கையுறை) வழங்கவில்லை. இதனால் இந்நகராட்சியில் பணிபுரியும் ஆண், பெண் துப்புரவு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே இவர்களின் நலன் கருதி தளவாட பொருட்கள் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் தூய்மை பணியாளர்கள் தளவாட பொருட்களுடன் வந்தால் தான் பணி செய்ய முடியும் என மேஸ்திரிகள் ஒருமையில் பேசுவதால் பெண் பணியாளர் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இப்படி அவதூறாக பேசி வரும் மேஸ்திரிகளான தமிழகன், செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.260 வீதம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக இவர்கள் வேலைக்கும் வருவதில்லை. ஆனால், 100 சதவீதம் வேலைக்கு வருவதாக கணக்கு காண்பிக்கப்படுகிறது. இதுதவிர ஊதியத்தில் பிடித்து வரும் இ.பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., யிலும் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது சம்பந்தமாக விசாரித்து மோசடியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டும்.


தூய்மை பணியார்களை அடிக்கடி வேலையை விட்டு நீக்குவதும் (பணம் பெறும் நோக்கில்), அவர் களுக்கு பதில் வேறு நபர்களை பணியமர்த்துவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. குறைந்தபட்ச கூலி சட்டம் அரசாணைப்படி நாளொன்றுக்கு ரூ.577 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பணியாளர் களுக்கு மாதந்தோறும் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பு கேட்டு விண்ணப்பித்த தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் குடியிருப்பு வழங்க வேண்டும். பி.எப்., கடன் தொகை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் இத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.