மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
செஞ்சேரியில் உள்ள பெரியசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கோனேரிபாளையம், நொச்சியம், ஆலம்பாடி கிராம மக்களுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமினை இன்று (18.07.2024) மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் நேரில் பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நகரப்பகுதிகள், பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்த நிலையில், தற்போது ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இன்றைய முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 539 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இச்சிறப்பு முகாம்களில் எரிசக்தி துறை/ தமிழ்நாடு மின்சார வாரிய துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை, வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, உள் துறை (காவல்), மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, வேளாண் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை, மாவட்ட தொழிற்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகிய 15 துறைகளில் வழங்கப்படும் 45 சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோனேரிபாளையம், நொச்சியம், ஆலம்பாடி கிராம மக்களுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம் செஞ்சேரியில் உள்ள பெரியசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக அன்றாடம் அனுகக்கூடிய அரசுத்துறைகளின் அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று அதை ஆன்லைனில் பதிவு செய்து, அவர்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மனுதார்க்கு விளக்கமளித்தனர்.
இம்முகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமினை பார்வையிட்டு இதுவரை எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பதிவேடுகளை பார்வையிட்டார். முகாமிற்கு வந்திருந்த மக்களிடம் உரையாடிய மாவட்ட ஆட்சியர் உங்களின் கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து, ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், மக்களின் ஒவ்வொரு மனுக்களின் மீதும் தனி கவனம் செலுத்தி, அம்மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தீர்த்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மக்கள் அரசு அலுவலர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையினை காப்பாற்றும் வகையில் உங்கள் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும் அறிவறுத்தினார்.
இந்நிகழ்வில் எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ச.சுந்தரராமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிற பகுதிகளிலும் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள் 24.07.2024 வரை நடைபெறவுள்ளது. அதனடிப்படையில், எளம்பலூர், எசனை, கீழக்கரை, வடக்குமாதவி கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 19.07.2024 அன்று எசனை வெங்கடேஸ்வரா திருமண மஹாலிலும், செங்குணம், அய்யலூர், கல்பாடி, கவுல்பாளையம் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 23.07.2024 அன்று கவுல்பாளையம் அன்னை திருமண மஹாலிலும் மற்றும் லாடபுரம், மேலப்புலியூர், களரம்பட்டி கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 24.07.2024 அன்று மேலப்புலியூர் நாயுடு சங்க சமுதாயக் கட்டடத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.






