பல வருடங்களாக பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காதால் மாணவ, மாணவிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட தென்னம்பட்டி, பிலாத்து, வாலி செட்டிபட்டி உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பல வருடங்களுக்கு முன்பு காட்டுநாயக்கன், பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காதால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து பாதிப்படைந்து வருவதாகவும், தற்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பதினொன்றாம் வகுப்புக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அதேபோல் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ் இல்லாமல் உள்ளதாகவும் அதிகாரிகளிடம் கேட்டால்
மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் ஜாதி சான்றிதழ் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்தால் அவை முறையான ஆவணங்கள் இல்லை எனக் கூறி நிராகரிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளிடமும் நேரடியாக சென்று எங்களுக்கு வழங்கியது போல் எங்களது குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என எங்களது ஜாதி சான்றிதழை வைத்து பல வருடங்களாக கேட்டு வருகிறோம்.
அதிகாரிகளிடம் கேட்டாலும் உரிய பதில் வழங்க மறுக்கிறார்கள். இதன் காரணமாகவே எங்களது குழந்தைகள் அனைவரும் பள்ளி, கல்லூரிக்கு சென்றும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, வாலிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கண்ணீர் மல்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதேபோல் பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளிடம் எங்களுக்கு வாழ தகுதி இல்லையா? நாங்கள் இந்த நாட்டு குடிமக்கள் இல்லையா? என்று கூறி, கண்ணீர் மல்க கூறி , பெண்கள் அழுது தங்களது குழந்தைகளுடன் வெயிலில் சுமார் ஒரு மணி நேரமாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தர்ணாவில் ஈடுபட்ட பழங்குடியின பொதுமக்களிடம் குறைகளை கேட்பதற்கே அரசு அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரமாக வராமல் இருந்தது அனைவரும் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
