கச்சத்தீவை திமுக ஆட்சியில் தாரை வார்த்தது போல தற்போது காவிரியும் தாரை வார்க்கப்படுமா என மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார்.
மதுரை அட்சயப் பாத்திரம் அமைப்பின் மூலம் உணவு வழங்கத் திட்டத்தின் 800 வது நாளை முன்னிட்டும் மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, சேலை, வேட்டி மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்றது.
மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு இதற்கான ஏற்பட்டினை செய்திருந்தார். மாற்றுத்திறனாளிக்கு அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.தமிழரசன், எஸ். எஸ் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது;
அரசியல் வரலாற்றில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும், வீர வரலாற்றின் பொன்விழா எழுர்ச்சி மாநாடு வரலாற்றின் திருப்புமுனையாக அமையும். இந்த மாநாட்டில் கழக நிர்வாகிகள் குடும்பம்,குடும்பமாக பங்கேற்கின்றனர். மக்கள் கடல் அலை போல் திரள உள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, மதுரையில் ஸ்டாலின் தனது தந்தையார் பெயரில் நூலகத்தைத் திறந்தார். நூலகத்தை மதுரை மக்கள் யாரும் கேட்கவில்லை, யாரும் கோரிக்கை வைத்ததாக தெரியவில்லை.
மதுரை மாவட்டத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோரிப்பாளையம் மேம்பாலம், பெரியார் சிம்மக்கல் மேம்பாலம், மேலமடைமேம்பாலம் ஆகிய திட்டங்கள் கிடப்பில் உள்ளது. மதுரையை சர்வதேச விமான நிலையமாக்க அண்டர்பாஸ் திட்டத்தினை, எடப்பாடியார் மத்திய அரசிடம் அனுமதியை பெற்று நிதி ஒதுக்கீடு செய்தார். இதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, திமுகவும் திட்டத்தை அறிவித்தது தற்போது கிடப்பில் போட்டுள்ளது.
அதேபோல் சேலம், மதுரை, கோவை ஆகிய இடங்களுக்கு எடப்பாடியார் கொண்டு வந்த பஸ்போர்ட் திட்டத்தையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை, துணைக்கோள் நகரம் போன்ற திட்டங்களும் கிடப்பில் உள்ளது.
மதுரையில் இரண்டு திட்டங்களை தான் திமுக செயல்படுத்தி உள்ளது ஒன்று நூலகம், மற்றொன்று ஜல்லிக்கட்டுக்கு மைதானம் ஆகும். பாரம்பரியமிக்க வாடிவாசல் வழியாகத்தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஆனால் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை யாரும் கேட்கவும் இல்லை, இதற்கு கூட தனது தந்தையார் பெயரை கூட முதலமைச்சர் சூட்டுவார்.
மதுரை மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்க குடிநீர் திட்ட பணியை எடப்பாடியார் கொண்டு வந்தார். அந்த திட்டம் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.
எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மதுரையில் கூடுதல் ஆட்சியர் கட்டிடம், வைகை ஆற்றின் குறுக்கே செக்டேம்கள்,காளவாசல், குருவிக்காரன் சாலை, ஓபுளாபடித்துறை ஆகிய இடங்களில் புதிய உயர்மட்ட மேம்பாலங்கள், தெப்பக்குளத்தில் நிரந்தர நீரை தேக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. மதுரையின் எதிர்கால நன்மை குறித்து வளர்ச்சி திட்டங்களை எடப்பாடியார் உருவாக்கினார்.
இன்றைக்கு தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகிய காய்கறிகள் விலைவாசி உயர்ந்து விட்டது.
இதை கட்டுப்படுத்தாமல் முதலமைச்சர் பெங்களூர் சென்றுள்ளார்.செயற்கையான முறையில் விலைவாசி உயர்ந்ததாக வியாபாரிகள் கருதுகின்றனர்.
இஞ்சி கிலோவிற்கு நூறு ரூபாய் உயர்ந்து விட்டது, பூண்டு கிலோவிற்கு ரூ 70 உயர்ந்துவிட்டது, சின்ன வெங்காயம் கிலோவிற்கு ரூ 50 ரூபாய் உயந்துவிட்டது, பச்சை மிளகாய் கிலோவிற்கு ரூ 45 உயர்ந்துவிட்டது, சீரகம் கிலோவிற்கு ரூ 400 உயர்ந்துவிட்டது துவரம்பருப்பு கிலோவிற்கு ரூ.40 உயர்ந்து விட்டது, புளி ஒரு கிலோவிற்கு ரூ 40 உயர்ந்து விட்டது ,உளுந்தம் பருப்பு ஒரு கிலோ ரூ 50 ரூபாய் உயர்ந்துவிட்டது. இன்றைக்கு மக்கள் குழம்பு வைக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.
ஆனால் முதலமைச்சர் எழுதாத பேனாவிற்கு 84 கோடியில் கடலில் சிலை வைக்கிறார். மதுரையின் பத்து தொகுதி வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது, பால்விலை உயர்ந்து விட்டது, சொத்து வரி உயர்ந்து விட்டது, கேரளா அரசு முல்லைப் பெரியாரில் அணைக்கட்ட முயற்சிக்கிறது, மேகதாவில் கர்நாடகா அரசு அணைக்கட்ட முயற்சிக்கிறது, திமுக ஆட்சியில் கட்சதீவு உரிமை பறிபோனது போல், காவிரியும் தாரை வார்க்கப்படுமா என்று விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
மேகதாது பற்றி அமைச்சர் கூறினாலும், முதலமைச்சர் இன்னும் வாய்திறக்கவில்லை. இது இரு மாநில பிரச்சனையாகும். முதலமைச்சர் பேசினால்தான் முக்கியத்துவம் இருக்கும்.
காவல்துறை உயர் அதிகாரி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்கிறார். தமிழகத்தில் தினம் தோறும் தற்கொலை, கொலை, கொள்ளை என நடக்காத நாளிலே இல்லை.முன்பெல்லாம் இரண்டு சக்கர வாகனத்தில் நகையை பறித்தார்கள் . இப்போது நான்கு சக்கர வாகனத்தில் சென்று நகையை பறித்து வருகின்றார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் அம்மாவின் ஆட்சி காலத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வாய்தா வாங்கி, வாய்தா அமைச்சராக இருந்தார்கள். தற்போது இந்த இரண்டு ஆண்டுகளில் திடீரென்று விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது, திமுக அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் உண்மையை எடுத்துச் சொல்லவில்லை என்று மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் தெளிவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, தற்போது எடப்பாடியார் தான் கழகத்தின் பொதுச்செயலாளர், இன்றைக்கு இந்த இயக்கத்தில் இரண்டரை கோடி தொண்டர்கள் உருவாகியுள்ளனர் சிலர் விமர்சனம் செய்து வருவதை மக்களின் முகம் சுளித்து வருகிறார்கள்.
இன்றைக்கு இரண்டு ஆண்டுகளில் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது, நிர்வாகம், வளர்ச்சி திட்டங்கள் எதிர்காலம் எதுவும் இல்லாமல் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதே எடப்பாடியார் ஆட்சி காலத்தில் கடைகோடி மக்களுக்கு திட்டங்கள் சென்றது. தொலைநோக்கு திட்டங்கள் கிடைத்தது.திமுக அரசு வீட்டுக்குப் போகும், எடப்பாடியார் கோட்டைக்கு போவார் அதற்கு பிள்ளையார் சூழியாக வருகின்ற ஆகஸ்ட் 20 தேதி மாநாடு அமையும் என கூறினார்.