• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

டெல்லியில் ஓய்வூதியதாரர்கள் தர்ணா போராட்டம்

Byவிஷா

Nov 7, 2024

வருகிற நவ.13ஆம் தேதியன்று, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு சிறப்பான மருத்துவ சேவையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு வரும் 13-ம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தவுள்ளது.
இது குறித்து இந்தக் குழுவின் துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.மோகன்தாஸ் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது..,
மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு சிறப்பான மருத்துவ சேவையை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
மத்திய அரசு சுகாதாரத் திட்டம் இல்லாத பகுதிகளில் வழங்கப்படும் மருத்துவப்படியை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு சேவைக் காலம் கணக்கில் கொள்ளாமல் மத்திய அரசு சுகாதாரத் திட்ட வசதி வழங்க வேண்டும்.
அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி முடக்கி வைக்கப்பட்டுள்ள 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை உடனடியாக ஓய்வூதியர்களுக்கும், ஊழியர்களுக்கும் திருப்பி வழங்க வேண்டும்.
நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைப்படி, ஓய்வூதியர்கள் 65, 70, 75 வயதை எட்டும்போது 5 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். அடுத்த கட்டமாக வரும் 13-ம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தவுள்ளோம். இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தும் ஆதரவு கோரியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பேட்டியின்போது, ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவர் பி.மோகன், மாநில ஒருங்கிணைப்பாளர் சி.கே.நரசிம்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.