மதுரை மாவட்டம் சோழவந்தானில் நிழற்குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.
இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். மேலும் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சோழவந்தான் நகருக்குள் வந்து செல்கின்றனர். சோழவந்தானில் பேருந்து நிலையம் வட்ட பிள்ளையார் கோவில் பேட்டை எம் வி எம் மருது மஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஜெனகை மாரியம்மன் கோவில் காமராஜர் சிலை மின்வாரிய அலுவலகம் காவல் நிலையம் பசும்பொன் நகர் வாடிப்பட்டி ரோடு ஆர் எம் எஸ் காலனி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளது. இந்த நிறுத்தங்களில் நிழற்குடைகள் இல்லாததால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் மழை காலங்களில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக முகூர்த்த நாட்களில் பேருந்து நிறுத்தங்களில் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் வெயில் தாங்க முடியாத நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். முகூர்த்த தினம் என்பதால் சோழவந்தானின் பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள் கூட்டம் மிக அதிக அளவில் காணப்பட்டது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் மதிய நேரத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெரியார் பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் மற்றும் திருமங்கலம் பேருந்துகள் வராததால் வயதான முதியவர்கள் குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகினர்.
பேருந்து நிறுத்தங்களில் நிழல் குடைகள் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை பொதுமக்களின் கோரிக்கைகளை மக்கள் பிரிதிநிதிகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை எனக் கூறும் பொதுமக்கள் அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சோழவந்தான் பகுதியில் உள்ள பொதுமக்கள் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் மற்றும் குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்படுவது சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராதது உள்ளிட்ட பிரச்சனைகளை காரணமாக கூறி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.
ஆகையால் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான சோழவந்தான் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிழல் குடைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர். நிழல் குடைகள் இல்லாத நிலையில் பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் முதியவர்கள் மயக்கமடைய கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் மக்கள் பிரதிநிதிகள் போர்க்கால அடிப்படையில் சோழவந்தான் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைத்து உடனடியாக பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.






