• Sat. Apr 27th, 2024

மதுரையில் மகனை கொன்று எரித்த பெற்றோர்!!

மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையில் எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கிடந்தது! இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். கரிமேடு பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மோப்ப நாய் மூலம் விசாரணையைத் தொடங்கினர்.. இறந்தது யார் என்று தெரியாத நிலையில், முன் பகையாலோ அல்லது ரவுடிக் கும்பல் கொலை செய்திருப்பார்களோ என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்தனர்.

உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு தீவிர விசாராணையைத் தொடங்கிய காவல்துறையினருக்கு கொலை சம்பந்தமாக சில தடயங்கள் கிடைத்தன.. இதனைத்தொடர்ந்து, கொலையானது மணிமாறன் என்பவர் என்றும், கொலை செய்தது அவரது பெற்றோர் என்பதையும் கண்டுபிடித்தனர்..

இதுகுறித்து கரிமேடு இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான காவல்துறையினர் கூறுகையில், “ஆரப்பாளயத்தில் கூலி வேலை செய்யும் முருகேசன்-கிருஷ்ணவேணி தம்பதியின் மகன் மணிமாறன்.. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் குடிப்பழக்கத்தால் மனைவியும், குழந்தையும் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனால் பெற்றோருடன் வசித்து வந்த மணிமாறன், எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு பெற்றோர்களிடம் பணம் கேட்டு தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

கடந்த 27-ம் தேதி இரவும் குடித்துவிட்டு கடும் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமான முருகேசன் விறகு கட்டையால் மணிமாறனை தாக்கியிருக்கிறார். அடி தாங்காமல் மயங்கி விழுந்த மணிமாறன் இறந்திருக்கிறார். இதை வெளியே தெரியாமல் மனைவியுடன் சேர்ந்து சாக்கு மூட்டையில் மணிமாறனின் உடலைக் கட்டி நள்ளிரவில் சைக்கிளில் ஏற்றி காமராஜர் மேம்பாலம் அருகேயுள்ள வைகை ஆற்றில் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருக்கிறார்கள். பின்னர், தங்கள் வேளைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆனால், சிசிடிவி காட்சிகள் அவர்கள்தான் கொலைகாரர்கள் என்பதை உறுதி செய்ய உதவியது. அப்பகுதியிலுள்ள அனைத்து சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்தபோது முருகேசனும் அவர் மனைவியும் சைக்கிளில் ஒரு மூட்டையைக் கொண்டு செல்வது தெளிவாகத் தெரிந்தது. அதோடுதான் அவர்களை பிடித்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டனர்.” என்றனர். குற்றவாளிகளை துரிதமாக கண்டுபிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *