நாகையில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்த ஊராட்சி செயலாளரை பழிவாங்கும் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து 6 மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மைக் பயன்படுத்த காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் கணினி ஆப்ரேட்டர் நியமிக்காமல் ஓராண்டுக்கு முன் நியமித்ததாக கூறி, ஒரு கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஊழல் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஒன்றியம் அகலங்கள் ஊராட்சியில் பணியாற்றும் பெண் ஊராட்சி செயலாளர் கௌசல்யா என்பவர் புகார் அளித்ததாக சந்தேகித்த அப்போது வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ரேவதி என்பவர் கௌசல்யா மீது பொய்யான காரணங்கள் கூறி, இடைநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. தவறு செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை திருச்சி நாகை திருவாரூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது காவல்துறையினர் மைக் பயன்படுத்த அனுமதி இருந்தும், மைக் பயன்படுத்த கூடாது என போலீசார் நெருக்கடி ஏற்படுத்தியதால் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஒரு கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகவும் அதனை உரிய விசாரணை நடத்தி வட்ட வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.