
நாகப்பட்டினம் இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து கடந்தாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டவர் என பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாகப்பட்டினம் பன்னாட்டு துறைமுகத்தில் இருந்து நேற்று குடியுரிமை சோதனை சுங்க சோதனைகள் முடித்து 85 பயணிகளுடன் காங்கேசம் துறைக்கு கப்பல் புறப்பட்டது. நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறை சென்றடைந்த கப்பலில் இருந்து வந்த பயணிகளை இலங்கை குடியுரிமை அதிகாரிகள் விசா நடைமுறைகளுக்காக சோதனை செய்தனர்.

அப்பொழுது காலாவதியான பாஸ்போர்ட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும், ஜப்பான் நாட்டை சேர்ந்த டைசோ (Daizo) என்பவரும் வருகை தந்ததை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அவர்களிடம் விசாரணை நடத்திய இலங்கை அதிகாரிகள் இருவரையும் நேற்று மாலை புறப்பட்ட கப்பலிலேயே இந்தியாவிற்கு மீண்டும் திருப்பி அனுப்பினர். நாகை துறைமுகத்திற்கு வந்த இருவரையும் உளவுத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கிடக்கு பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் டைசோ இந்தியாவில் தொழில் நிறுவனம் நடத்தி வந்த நிலையில் அதனால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாமல் தனது பாஸ்போர்ட் புதுப்பிக்காததால் தனது நாட்டிற்கு விமானம் மூலம் செல்ல முடியாமல் இருந்ததும், நாகையிலிருந்து கப்பல் இயக்கப்படுவதால் எளிதாக இலங்கை சென்று அங்கு இருந்து ஜப்பான் செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.
நாகையிலிருந்து இலங்கை செல்லும் சாமானிய சுற்றுலா பயணிகளை சோதனை என்ற பெயரில் பல மணி நேரம் துன்புறுத்தி வரும் குடியுரிமை துறை அதிகாரிகள் வெளிநாட்டவரை அலட்சியமாக அனுப்பி வைத்த விவகாரம் நாகையில் மட்டுமல்லாது இலங்கையிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியுரிமைத் துறை அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு அவரை அனுமதித்தார்களா என்பது குறித்தும் உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
