• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாஜக ஆட்சியை கலாய்த்த ப.சிதம்பரம்..!

ByA.Tamilselvan

Aug 13, 2022

சிவகங்கையில் நடைபெற்ற 75 வது சுதந்திர தினவிழா பாதயாத்திரையில் கலந்து கொண்ட ப.சிதம்பரம் பாஜக ஆட்சியை விமர்சித்து பேசினார்
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சார்பில் 75-வது சுதந்திர தின விழா பாதயாத்திரை சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்காலில் இருந்து தொடங்கி காந்திவீதி, மரக்கடை வீதி வழியாக அரண்மனை வாசல் சென்றடைந்தது.
இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, ராஜசேகரன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயசிம்மன், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சிவகங்கையில் பாதயாத்திரை நிறைவு பெற்றது. அப்போது ப.சிதம்பரம் பேசியதாவது
“இந்திய சுதந்திரத்திற்கு போராடிய ஒரே கட்சி காங்கிரஸ் தான். மகாத்மா காந்தி தலைமையில் சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களால் போராடி பெற்ற சுதந்திரம் இது.1947-ல் இருந்து காங்கிரஸ் ஆட்சி புரிந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வலிமை மிகுந்த நாடாக இந்தியா மாறியது. பாஜக ஆட்சியில் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் நீடிக்கிறது. இதனை கண்டித்து இந்த பாதயாத்திரை நடக்கிறது.
முன்பெல்லாம் மின்சாரத்தை தொட்டால் மட்டும் ஷாக் அடிக்கும். தற்போது பாஜக ஆட்சியில் எதை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது.காய்கறி, பழங்கள் ஆகட்டும், பாலாகட்டும், தயிராகட்டும், அரிசியாகட்டும், பருப்பாகட்டும், சமையல் எரிவாயு, டீசல் – பெட்ரோல் என எந்த பொருளை எடுத்தாலும் விலை உயர்ந்துள்ளது. இதை அரசு ஒத்துக் கொள்ளாது. ஆனால் ரிசர்வ் வங்கி ஒத்துக்கொள்ளும்.மக்கள் வாங்குவது குறைந்துள்ளது.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 50 லட்சம் பெண்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அவர்கள் வேலை தேடுவதை நிறுத்தி விட்டார்கள்.18 முதல் 30 வயது இளைஞர்கள் மத்தியில் வேலை இல்லாமை 25 சதவீதம் ஆனது. 5 ஆயிரம் சிறு, குறு தொழில் இருந்த நகரங்களில் 500-ஆக குறைந்துள்ளது. எத்தனை லட்சம் பேர், கோடி பேர், வேலைகளை இழந்துள்ளார்கள்?.
இதற்கெல்லாம் முழு முதல்காரணம் நரேந்திர மோடியும் பாஜகவும் தான். இவர்கள் தப்பிக்கவும் முடியாது; தப்பி ஓடவும் முடியாது” என அவர் பேசினார்.