• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி…

ByKalamegam Viswanathan

Nov 28, 2023

ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி 10 நாட்கள் இலவசமாக நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 34 மாணவர்கள் கோவை செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் 10 நாட்கள் களப் பயிற்சி மேற்கொண்டனர். இதன்மூலம் விதை விதைப்பது முதல் அறுவடை செய்வது வரை பல்வேறு விஷயங்களை அவர்கள் நேரடியாக கற்றுக்கொண்டனர்.

இந்த களப் பயிற்சி நவ.7-ம் தேதி தொடங்கி நவ.27-ம் தேதி வரை 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வேளாண் நிலத்தை தயார் செய்வது, இயற்கை இடுப்பொருட்களை தயாரிப்பது, களை எடுப்பது, பூச்சிகளை மேலாண்மை செய்வது, நெல், கீரை, காய்கறி என வெவ்வேறு விதமான பயிர்களை சாகுபடி செய்வது உட்பட ஏராளமான விஷயங்கள் நேரடி செயல் விளக்கத்துடன் கற்றுக் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக இப்பயிற்சியில் கலந்து கொண்ட ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் திரு. ஹரிஹரன் கூறுகையில், “நான் என்னுடைய வீட்டிற்கு அருகில் ஒன்று அல்லது இரண்டு பயிர்களை விவசாயம் செய்வதை பார்த்திருக்கேன். ஈஷா மாதிரி பண்ணைக்கு வந்த பிறகு தான் பல பயிர் சாகுபடி முறை குறித்து முதல்முறையாக தெரிந்து கொண்டேன். இந்த முறையில் 5, 6 பயிர்களை ஒரே இடத்தில் உற்பத்தி செய்ய முடியும். இதனால், பூச்சி தொல்லைகள் குறையும், களைகள் அதிகம் வராது, அடிக்கடி உழவு செய்ய வேண்டியது இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அதேபோல், ரசாயன விவசாயத்தை போலவே இயற்கை விவசாயத்திலும் நல்ல மகசூல் எடுக்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்றார்.

இப்பயிற்சியில் மாணவர்களுடன் கலந்து கொண்ட வேளாண் அறிவியல் ஆசிரியர் திருமதி. ஆனந்த கலைச் செல்வி அவர்கள் கூறுகையில், “இந்த பயிற்சி எங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நாங்கள் புத்தகங்கள் மூலம் கற்றுக்கொடுப்பதை நேராக களத்தில் பார்த்து தெரிந்து கொள்ளும் போது, அந்த விஷயங்கள் மாணவர்கள் மனதில் நன்றாக பதியும். இப்பயிற்சியை இலவசமாக எங்களுக்கு வழங்கிய ஈஷாவின் மண் காப்போம் இயக்கத்திற்கு நன்றி ” என்றார்.

களப் பயிற்சியின் நிறைவு நாளான நேற்று (நவ 27) மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி ஸ்ரீமுகா அவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழும், மரக்கன்றுகளும் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதுபோன்ற பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் 97894 98792 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.