• Sat. May 18th, 2024

சர்பாசி சட்ட விவகாரம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்…

BySeenu

Nov 28, 2023

சர்பாசி சட்ட விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்தும் RBL வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் “அடாவடி கடன் வசூல் மூலம் சிறு தொழில் முனைவோரை வதைக்க கூடாது, Dromos Shafts நிறுவனத்திற்கு நியாயம் வழங்கிட வேண்டும், சர்பாசி சட்டத்திற்கு கண்டனம்” ஆகியவை வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குறு சிறு தொழில் முனைவோர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிறு குறு தொழில் முனைவோர்களை பாதுகாப்பது என்பது மாநில அரசுக்கும் மத்திய அரசிற்கும் பொதுவான ஒன்று என தெரிவித்தார். சிறு குறு தொழில் முனைவோர்களிடம் அமைச்சர் உட்பட பலரும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தனியார் வங்கிகள், கொடுத்திருக்கக் கூடிய கடனை வசூலிப்பது என்ற பெயரில் கொடூரமான முறையில் நடந்து கொள்வதாக தெரிவித்தார். அண்மையில் சர்பாசி சட்டத்தின் கீழ் கோவையில் உள்ள தொழில் முனைவோர் ஒருவரின் சொத்துக்களை முடக்கியது குறித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்கின்ற பொழுது தனியார் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியதாகவும் அதனை நியாயமான பதிலாக ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் சர்பாசி சட்டத்தின் கீழ் காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு செல்வது என்றால் மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமல் அது நடக்காது என குறிப்பிட்ட அவர், மாவட்ட ஆட்சியர் சிறு குறு தொழில்களை பாதுகாப்பதற்கு பதிலாக, அதனை அழிக்கின்ற நடவடிக்கையாக இருக்கும் தனியார் வங்கி நிறுவனங்களுடன் நிற்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை எனவும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஏலம் எடுப்பவர்கள் கள்ளக் கூட்டு என்கின்ற வகையில் மிக வேகமாக செயல்பட்டு வருவதாக விமர்சித்தார். எனவே மத்திய அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் கோவையில் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோரின் வீட்டை திறந்து அவரை குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *