• Tue. Apr 30th, 2024

எண்ணூர் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவு..!

Byவிஷா

Dec 27, 2023

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் திடீரென அமோனியம் வாயு கசிந்து, அங்குள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால், அத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எண்ணூரில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில், அமோனியம் வாயு திடீரென கசிந்ததால், அப்பகுதியில் உள்ள மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். மேலும், பதற்றம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பதற்றம் அடையாமல் வீடுகளுக்கு செல்லுமாறு காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. பின்னர், தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து தனியார் உர தொழிற்சாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இரவு 11.30 மணியளவில் அமோனியா இறக்கும் பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. தற்போது அமோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்ததுள்ளது. ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில ;அமோனியா வாயு கசிவினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *