• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மூன்று மாதத்தில் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு

Byவிஷா

Jan 27, 2025

தமிழ்நாட்டில் உள்ள கொடிக்கம்பங்களை 3 மாதத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான அனைத்து இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களையும் அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், வருங்காலங்களில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைக்க வருவாய்த்துறை அனுமதிக்க கூடாது. பட்டா இடங்களில் கம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மதுரை விளாங்குடி, பழங்காநத்தம் ரவுண்டானா அருகே அ.தி.மு.க.,கொடி கம்பம் நட அனுமதி கோரி, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜன.,27) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுஇடங்களில் கொடிக்கம்பங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் நிறுவ தடை விதிக்கப்படுவதாக கூறியதுடன், பட்டா நிலத்தில் கொடிக்கம்பங்களை நிறுவலாம். அதற்குரிய விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், கொடி கம்பங்களை சம்பந்தப்பட்ட கட்சியினரே அகற்ற தவறினால் அரசே அகற்றி விட்டு அதற்குரிய செலவு தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, கொடி கம்பம் நட அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.