ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அதிமுகவிலிருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
அதிமுக இரு அணிகளாக பிளவுப்பட்டு ஓபிஎஸ் தலைமையில் ஓரணியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியுமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் கோவை செல்வராஜ்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு தொடர்ந்து பதிலடிகளை கொடுத்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சுயநலத்திற்காக அதிமுகவை பிளவுப்படுத்துகிறார்கள். அவர்களுடன் பயணிக்க நான் விரும்பவில்லை. எனவே கட்சியிலிருந்து நானாகவே விலகுகிறேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் அண்ணா அறிவாலயத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் கோவை செல்வராஜ் வருகை தந்தார். அங்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த கோவை செல்வராஜ் அக்கட்சியில் இணைந்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில் தமிழக மக்களையும் தமிழகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை முதல்வர் ஸ்டாலினை தவிர வேறு யாருக்குமே இல்லை. ஆறுமுகசாமி ஆணையத்தினால் நான் அதிமுகவில் தொடரவில்லை. அதனால் நான் விலகுகிறேன் என கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி அளித்திருந்தார்.