ஸ்ரீவில்லிபுத்தூர் 108 திவ்யதேசங்களில் முக்கியமான தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு இன்று நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி ராபத்து உற்சவத்தின் முதல்நாள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் பெரியபெருமாள் சுவாமிகளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் பட்டர் தலைமையில் நடைபெற்றது. காலை 7.05 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது, பெரிய பெருமாள், அதனைத் தொடர்ந்து ஆண்டாள் ரெங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினர். முக்கிய பிரமுகர்களும், ஏராளமான பக்தர்களும் கோவிந்தா.. கோபாலா.. என்ற கோஷங்கள் முழங்க பின் தொடர்ந்து வந்தனர். அப்பொழுது சொர்க்க வாசல் எதிரே பெரியாழ்வார், ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், வேதாந்த தேசிகர், ஆகியோர் எதிர் கொண்டு சேவித்து மஙகளா சாசனம் செய்யும் வைபவம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சுவாமிகள் ராபத்து மண்டபம் வந்தருளினர். விழாவில் அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, அறங்காவலர்கள் மனோகரன் வெங்கடசாமி, ராம்குமார் வரதராஜன், உமாராணி, நளாயினி உட்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ராப்பத்து உற்சவம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.