• Mon. Oct 7th, 2024

ஒரு மொழியை உயர்த்திப் பிற மொழியை குறைத்துப் பேசக் கூடாது- தமிழிசை சவுந்தரராஜன்

Byகாயத்ரி

May 16, 2022

பிற மொழி திணிப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலுக்கு வந்த புதுச்சேரி கர்வனர் தமிழிசை சொந்தர்ராஜன் நிருபர்களிடம் பேசியபோது, குமரி கடற்கரையில் நடைபெறும் பவுர்ணமி தீப ஆரத்தி நிகழ்ச்சி மிகவும் சிறப்பு பெற்றது. நதிகள் மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளுக்கு ஆரத்தி எடுப்பது தமிழர்களின் பண்டைய கால கலாச்சார முறையாகும். மேலும் அது நாம் நீர்நிலைகளுக்கு நன்றி கூறி மரியாதை செலுத்தும் விதமாக அமைகின்றது. இந்த நிகழ்வுகள் நமக்கு நினைவு கூறுவது என்னவென்றால் நீர் நிலைகளை நாம் ஆக்கிரமிக்காமல் அவற்றை பாதுகாக்க வேண்டும். மேலும் இதே போன்ற தமிழர்களின் பண்டைய கலாசார நிகழ்வுகள் நடைபெறும் போது அது இளைய தலைமுறையினருக்கும் ஒரு நல்ல வழிகாட்டுதலாக அமையும். தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை முறைகள், வீரம், ஆளுமை திறன் மற்றும் அவர்களின் அறிவுக்கூர்மை போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் நமது கலாச்சாரங்களை அறிந்து அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மேலும் அவற்றை நம் எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துக் கூறவேண்டும். பண்டைய காலம் தொடங்கி இன்றைய காலம் வரையிலும் தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்றாக இணைந்தது. ஆன்மிகம் இல்லாமல் தமிழ் இல்லை என்பதில் தமிழக மக்களும் நானும் மிகுந்த உறுதியுடன் இருக்கின்றோம். ஆனால் சில கட்சியினர் தமிழிலிருந்து ஆன்மீகத்தை பிரிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். இது எப்பொழுதும் நடக்காது. நமது நாட்டில் பல மொழிகள் இருக்கிறது அதில் அவரவர் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்றுக் கொள்ள வேண்டும். தொழிற்கல்வி மற்றும் வேலை நிமித்தமாக பிற மொழிகளை கற்பது நம்முடைய எதிர்காலத்திற்கு மிகவும் பயன்பெறும். இதனை பிற மொழித் திணிப்பு என எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் இங்கு பிற மொழி திணிப்பு என்பதற்கு இடமில்லை. ஆனால் நம்மில் பலர் தமிழ் மொழியை முழுமையாகப் படிப்பதில்லை என்பது வேதனைக்குரியது. ஒரு மொழியை உயர்த்திப் பிற மொழியை குறைத்துப் பேசக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *