ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்காளர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி தெரிவித்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலை, அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், ஜன.10-ம் தேதி தொடங்கிய போது. 3 சுயேட்சை வேட்பாளர்கள், 13-ம் தேதி 6 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு செய்திருந்தனர். நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார்.
முன்னதாக, ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரண்டு.ஊர்வலமாக செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால், காவல் துறையினர் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து வேட்பாளர் சீதாலட்சுமி கார் மூலம் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து
சீதாலட்சுமி கூறியதாவது: ” சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து மனுத்தாக்கல் செய்ய போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். திமுகவினர் இப்போதே அராஜகத்தை தொடங்கி விட்டனர். திமுகவின் அடக்குமுறையை மீறி, சீமான் தலைமையில், சட்டத்துக்கு உட்பட்டு பிரச்சாரம் மேற்கொள்வோம். வாக்காளர்களைச் சந்தித்து நீதி கேட்போம். அவர்கள் எங்களை ஆதரித்து திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.