தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் சாலை பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன்பின் திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச டேப்லட்களை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், மக்கள் முழுக் கட்டுப்பாட்டுடன் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக பின்பற்ற வேண்டும் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், விரைந்து போட்டு கொள்ளவேண்டும்.
மேலும் பேசிய அவர், நமது அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் பரவி வந்த தக்காளி வைரஸ் நோய் தொற்றின் தாக்கமானது, தமிழகத்திலும் இருப்பதாக கூறப்படுவதில் எந்த ஒரு உண்மையும் இல்லை. தற்போது கேரள மாநிலத்திலும் அந்த நோயின் தாக்கம் இல்லை. எனவே தமிழக மக்கள் இது குறித்து எந்தவித அச்சமும் பட தேவையில்லை. இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.