கடந்த 2015ஆம் ஆண்டில் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வில் பெரும் கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறு மற்றும் அகழாய்வுப் பணிகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட அகழாய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் தமிழனின் பல அரிய வகை பொருட்களும், தாழிகள் உட்பட பல தொல்லியல் பொருட்களும் கலைப் பொருட்களும் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், கீழடியில் நடைபெற்று முடிந்த 7ம் கட்ட அகழாய்வு தளத்தை ஆய்வு செய்த தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அகழாய்வு குழிக்குள் இறங்கி அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தொன்மையான பொருட்களை பார்வையிட்டார். அப்போது தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் உள்ளிட்ட தொல்லியல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், 7ஆவது கட்டமாக நடைபெற்ற அகழாய்வு குழிகளை வழக்கம் போல் மூடிவிடாமல் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் திறந்த வெளி அருங்காட்சியமாக மாற்றப்படும். அகழாய்வு குழிகள் திறந்த நிலையில் வைப்பது இதுவே முதன்முறை என தெரிவித்த அவர், கட்டுமானங்கள் செங்கல் கட்டுமானங்களை பார்வைக்கு வைத்து பாதுகாக்க தொழில்நுட்ப வசதிகளை மேற்கொள்ள சென்னை ஐஐடி-யின் உதவியை நாட உள்ளதாகவும் தெரிவித்தார்.
8ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து இன்னும் முடிவுகள் எடுக்கவில்லை எனவும், முடிவு செய்த பின்னர் முறையாக அறிவிக்கப்பட்டும் எனவும் தெரிவித்தார்.
7ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் முதல் முறையாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சூடுமண் உரை கிணறு கிடைத்துள்ளது. அதேபோல், பஞ்சு மார்க் நாணயம் கிடைக்கப்பெற்றுள்ளது. கங்கை சமவெளியோடு வாணிக தொடர்பை எடுத்து சொல்லும் அளவில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.