• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வால்பாறை தொகுதியில் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை : தேர்தல் ஆணையம்

Byவிஷா

Jun 24, 2025

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைந்த நிலையில், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி (60) கடந்த ஜூன் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். வழக்கமாக ஒரு எம்எல்ஏ மறைந்தால், அது தொடர்பாக இறப்பு சான்று, சட்டப்பேரவை செயலருக்கு கிடைத்த பிறகு, உறுப்பினர் மறைவால் தொகுதி காலியாக இருப்பதாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிப்பார். அதனைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்படுவது என்பது வழக்கமான நடைமுறையில் இருந்து வருகிற ஒன்றாகும்.
அதுபோல வால்பாறை தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரலாம். அப்படி வந்தால், அரசியல் கட்சிகளுக்கு, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும். அதனால் சுவாரஸ்யம் மிகுந்ததாக அந்த இடைத்தேர்தல் அமையும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த ஜெ.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து, 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே இருந்ததால், அத்தொகுதிக்கு தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலை நடத்தவில்லை. 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலுடன் சேர்த்தே தேர்தல் நடத்தப்பட்டது.
தற்போதுள்ள அரசின் பதவி காலம் மே 9-ம் தேதி வரை உள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலும் வர இருப்பதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின்படி, ஒரு தொகுதிக்கு தனியாக தேர்தல் நடத்த தேவையில்லை. அதனால் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.