இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே, காங்கிரசுடன் கூட்டணி இல்லை என அரவிந்த்கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வந்த ஆம் ஆத்மி, இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தததால் பின்னடைவை சந்தித்தது சமீபத்தில் பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி ஆம் ஆத்மி கட்சிக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து உள்ளது.
பஞ்சாப்பில் இடைத்தேர்தல் நடந்த ஒரு தொகுதியையும், குஜராத்தில் 2 தொகுதிகளில் நடந்த தேர்தலில் ஒரு தொகுதியையும் (விசாவதார்) ஆம் ஆத்மி கைப்பற்றியது. எனவே குஜராத்தில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்த ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. இதையொட்டி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் அகமதாபாத் சென்றுள்ளார்.
அங்கு கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,
”காங்கிரசுடன் எங்களுக்கு எந்த கூட்டணியும் இல்லை. அப்படி ஏதாவது கூட்டணி இருந்தால், அவர்கள் (காங்கிரஸ்) ஏன் விசாவதார் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார்கள்? எங்களை தோற்கடிக்கவே போட்டியிட்டார்கள். ஆம் ஆத்மியின் ஓட்டுகளை பிரித்து எங்களை தோற்கடிப்பதற்காக காங்கிரசை பா.ஜனதா அனுப்பி இருந்தது. காங்கிரஸ் தோற்றபோது பா.ஜனதா கூட அவர்களை கண்டிக்கிறது. இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது. தற்போது எங்கள் தரப்பில் அந்த கூட்டணி இல்லை.”
எனத் தெரிவித்துள்ளார்.