கடலில் இருந்து தரவுகளை சேகரிக்க புதிய தொழில்நுட்பத்தை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கடலின் தரைப்பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் வரையில் மீன்பிடி படகில் சென்று தரவுகளை சேகரிக்கவும், கடலின் சுகாதாரத்தை ஆய்வு செய்ய பயன்படும் வகையிலும் புதிய தொழில்நுட்பத்தில் போட் பேஸ்ட் ரியல் டைம் டவேட் கடல் கண்காணிப்பு கருவியை சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இதற்கு முன்னர் தரவுகளை அளவிடுவதற்கு பெரிய ஆராய்ச்சிக் கப்பல்கள், நிலையான அல்லது நங்கூரமிடப்பட்ட பாய்மர அமைப்புகள் தேவைப்பட்டன.ஆனால், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் தற்போது குறைந்த செயல்பாட்டு செலவுகள் மற்றும் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் கடற்கரையின் தரைப்பகுதி மற்றும் ஆறுகளின் நீர் கடலில் கலக்கும் கழிமுக பகுதியில் ஏற்படும் உயர் தெளிவுத்திறன் கொண்ட தரவுகளை சேகரிக்கும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளது.
போட் பேஸ்ட் ரியல் டைம் டவேட் கடல் கண்காணிப்பு கருவி குறித்து, தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் கூறும்போது, “கடலில் இருந்து பெறப்படும் தரவுகளை பயன்படுத்தி தட்பவெட்ப நிலையையும், மழை பொழிவையும் கணித்து கூறி வருகின்றனர். இதுவரை கடலில் பாய் அமைப்புகளை பயன்படுத்தி தரவுகளை பெற்று தந்து வருகிறோம். தற்போது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள போட் பேஸ்ட் ரியல் டைம் டவேட் கடல் கண்காணிப்பு கருவியை கருவியின் மூலம் மீன்பிடி படகுகளில் சென்றும் கடலின் தரவுகளை பெற முடியும். மேலும் படகு சென்றுக் கொண்டிருக்கும் போதே தரவுகளை நிகழ்நேரத்தில் பெற்றுக் கொடுக்க முடியும்.
இந்த அமைப்பு வங்காள விரிகுடாவில் உள்ள எண்ணூர் கடற்கரையில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 10 மீ முதல் 100 மீ ஆழத்தில் இருந்து தட்ப வெப்டம், கடலில் உள்ள பிற கனிமங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை இது பெற்று தருகிறது. மழைக்காலத்தில் ஆறுகளில் இருந்து வரும் நீர் கடலில் உள்ளே புகும்போது கடலின் உவர்ப்பு தன்மையிலும் மாற்றம் ஏற்படும். அப்போது கடல் வாழ் உயிரினங்களின் நிலையை அறிந்து கொள்ளவும், கடலில் கழிவுகள் எந்தளவிற்கு கலக்கிறது என்பதையும் இக்கருவியின் மூலம் கண்டறிய முடியும்” என்றார்.
போட் பேஸ்ட் ரியல் டைம் டவேட் கடல் கண்காணிப்பு கருவியை தயாரித்த விஞ்ஞானியும் ,எலக்ட்ரானிக்ஸ் குழுவின் தலைவருமான எஸ்.முத்துக்குமாரவேல் கூறும்போது, “கடலில் இருந்து தரவுகளை பெறுவதற்கு புதிய தொழில்நுட்டபத்தில் நாங்களே கருவியை உருவாக்கி உள்ளோம். இதனை படகில் பொருத்தி நிகழ்நேரத்தில் தரவுகளை பெற முடியும். இதனால் கடலின் கரையோரப் பகுதியில் செல்லும்போது ஏற்படும் காலநிலை மாற்றங்களை மீண்டும் அதே இடத்தில் வந்து உறுதி செய்துக் கொள்ள முடியும். கடலில் இருந்து பெறப்படும் தட்பவெட்ப நிலை தரவின் மூலம் மழை பொழிவையும் கணிக்க முடியும். ஆற்றில் இருந்து வரும் நீர் கடலில் கலக்கும்போது, உப்பு நீரில் ஏற்படும் மாற்றம், கடல் வாழ் உயிரினங்களின் சூழல் மாற்றம் போன்றவற்றையும் கண்டறிய முடிவதுடன், கழிவுகள் கலப்பதையும் தெரிந்துக் கொள்ளலாம்.
இந்த இயந்திரத்தை கடலில் இறக்கி செயல்படுத்தும்போது, முழுவதும் தானியங்கி முறையில் செயல்பட்டு, தரையில் தட்டாமல் செல்வதுடன், தரவுகளையும் அளிக்கும். மீனவர்கள் பயன்படுத்தும் படகிலேயே இந்த இயந்திரத்தை பொருத்தி இயக்கப்படுவதால், செலவும் குறைவாக இருப்பதுடன், தரவுகளை உறுதி செய்ய மீண்டும் இதனை இயக்க முடியும்” என்றார்.
கடலில் இருந்து தரவுகளை சேகரிக்க புதிய தொழில்நுட்பம்
