• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டெல்லி அருகே புதிய சர்வதேச விமானநிலையம்.., அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி..!

Byவிஷா

Nov 24, 2021

இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு அருகே புதிய சர்வதேச விமான நிலையம் உருவாக்கும் உத்தரபிரதேச அரசின் திட்டம் நீண்ட தாமதத்துக்குப் பிறகு முக்கிய ஒப்புதல்களை பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் உள்ள ஜேவாரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு நாளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.


புதுடெல்லி விமான நிலையத்திற்கு போட்டியாக மிகப்பெரிய விமான நிலையத்தை டெல்லி அருகே உருவாக்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விமான நிலையம் உருவாக்கப்பட்ட பிறகு இந்தியாவில் ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உத்தரப்பிரதேசம் முன்னணி வகிக்கும் என கருதப்படுகிறது. பத்து வருடங்களுக்கு மேலாக இந்த விமான நிலைய திட்டம் கிடப்பில் இருந்த நிலையில், தற்போது இறுதி ஒப்புதல்கள் பெற்று வருகிறது. அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரபிரதேச அரசு விமான நிலையம் உருவாக்கும் பணிகளை தொடங்க முனைப்பு காட்டி வருகிறது.


எதிர்காலத்திற்கு தேவையான விமானப் போக்குவரத்துத் வசதிகளை உருவாக்குவதை ஊக்கப்படுத்துகின்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நோக்கியதாக இந்த விமான நிலைய உருவாக்கம் இருக்கும், என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட குஷிநகர் விமான நிலையம், அயோத்தியாவில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட புதிய சர்வதேச விமானநிலையங்கள், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பன்முக வளர்ச்சிக்கு ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த விமான நிலையம் தில்லி தலைநகர் பிராந்தியத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக இருக்கும். இது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெருக்கடி குறைவதற்கு உதவும். இதன் அமைவிடம் காரணமாக தில்லி, நொய்டா, காசியாபாத், அலிகார், ஆக்ரா, ஃபாரிதாபாத் மற்றும் அருகில் உள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களின் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வடக்கு இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து நுழைவாயிலாக இந்த விமான நிலையம் இருக்கும். அளவு மற்றும் திறன் காரணமாக உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய விமான நிலையமாக ஜேவர் விமான நிலையத்தை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.


ஜனத்தொகை படி இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் தேவைக்கு ஏற்ப பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் இந்த விமான நிலையம், உலகளாவிய சரக்குப் போக்குவரத்து வரைபடத்தில் இந்த மாநிலம் இடம்பெறுவதற்கு உதவும். போக்குவரத்து செலவு, சரக்குப்போக்குவரத்திற்கான நேரம் ஆகியவற்றைக் குறைப்பதை நோக்கமாகக்கொண்டு இந்த விமான நிலையத்துக்கான திட்டங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.