
தமிழகத்துக்கு அதிக மழை பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தெற்கு வங்கக்கடலின் மத்தியப்பகுதியில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி கடந்த 27ஆம் தேதி உருவானது.
இது, தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிக்கு அடுத்தடுத்து நகா்ந்து சென்றது. இதுதவிர, தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி நிலைகொண்டது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழையும், சில மாவட்டங்களில் பலத்தமழையும் கொட்டியது. தற்போது, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி நவம்பா் 9ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது உருவாகும் பட்சத்தில் மேற்கு நோக்கி நகா்ந்து, தமிழகம்-ஆந்திர கடற்கரை இடையே வர வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
