• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மனித மூளையில் ‘சிப்’ சோதனையைத் தொடங்கிய நியூராலிங்க் நிறுவனம்

Byவிஷா

Jan 30, 2024

எலான்மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் தான் வடிவமைத்துள்ள எண்ணங்களை செயல்படுத்தும் வகையில், மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’ – ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு நிர்வாகம் கடந்த ஆண்டு நியூராலிங்க் மனிதர்களைக் கொண்டு சோதனை செய்ய அனுமதி வழங்கிய நிலையில் தற்போது அச்சோதனை நடைபெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகள் வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது. தற்போது முதன்முறை மனிதருக்குப் பொருத்தப்பட்டு சோதனை நடைபெறுகிறது. இதனை எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனை தொடங்கியதாகவும், சிப் பொருத்தப்பட்டிருக்கும் அந்த நபர் உடல்நலன் தேறி வருவதாகவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். மேலும், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபரின் முதற்கட்ட மருத்துவ அறிக்கை, அவருடைய நியூரான் ஸ்பைக்குகள் நேர்மறையான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
நியூராலிங்கின் முதல் தயாரிப்பின் பெயர் டெலிபதி என மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த டெலிபதி உபகரணமானது எண்ணங்கள் மூலம் தொலைபேசி மற்றும் கணினியை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கை, கால் போன்ற உறுப்புகளை இழந்தவர்களின் பயன்பாட்டுக்காக இந்த உபகரணம் வழங்கப்படும் என்றும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங்கால் வேகமாகத் தொடர்பு கொள்ள முடிந்திருந்தால் எப்படி இருக்கும். அதை சாத்தியமாக்குவது தான் எங்களின் இலக்கு என்று மஸ்க் கூறியுள்ளார்.
ஏற்கெனவே மஸ்க் நியூராலிங் பற்றி பேசியபோது, நம் கபாலத்துக்குள் ஒரு ஃபிட்பிட் உபகரணம் போல் நியூராலிங் சிப் செயல்படும். மூளை செயல்பாட்டை தூண்டிவிடும். இதன்மூலம் ஆட்டிசம் பாதித்தோர் பலனடைவர். மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கூட பலனடையலாம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.