பீஸ்ட் படத்தில் விஜய் போர் விமானத்தை ஓட்டும் காட்சியை டுவிட்டரில் பகிர்ந்திருந்த விமானப்படை அதிகாரி ஒருவர், கடுமையாக விமர்சித்திருந்தார். கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. இதையடுத்து இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான டாக்டர் படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால் அவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்து இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பீஸ்ட் படம் அமையவில்லை. இப்படம் மோசமான திரைக்கதை மற்றும் லாஜிக் மீறல்கள் காரணமாக கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இப்படம் அண்மையில் ஓடிடி-யில் வெளியானது. இதையடுத்து இப்படத்தை ஓடிடி-யில் பார்த்த விமானப்படை அதிகாரிகள், அதில் உள்ள லாஜிக் ஓட்டைகளை சுட்டிக்காட்டினர். குறிப்பாக பீஸ்ட் படத்தில் விஜய் போர் விமானத்தை ஓட்டும் காட்சியை டுவிட்டரில் பகிர்ந்திருந்த விமானப்படை அதிகாரி ஒருவர், கடுமையாக விமர்சித்திருந்தார். அதில் ஹெல்மெட் அணியாமல் விஜய் எப்படி போர் விமானத்தை ஓட்டினார் என்றும், நடுவானில் மற்றொரு விமான அதிகாரியை பார்த்து சல்யூட் அடிக்கும் காட்சிகளையும் விமர்சித்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக பீஸ்ட் படம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வந்தது. இதற்கு தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு கட்டி உள்ளது. பீஸ்ட் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. ட்ரோல் செய்வதற்காக பீஸ்ட் படத்தின் காட்சிகள் டுவிட்டரில் பகிரப்படுவதை அறிந்த அந்நிறுவனம், காப்புரிமை காரணமாக அந்த வீடியோவை நீக்கி உள்ளது. இதனால் பீஸ்ட் படம் தொடர்பான விவாதங்கள் டுவிட்டரில் குறைந்துள்ளன.