• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூரில் தேசிய நெல் திருவிழா -150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகள் பங்கேற்பு

ByN.Ravi

Sep 13, 2024

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில் கிரியேட் – நமது நெல்லை காப்போம் அமைப்பின் சார்பில் 18 ஆம் ஆண்டு தேசிய நெல் திருவிழா நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் இயற்கை விவசாயிகள், 50க்கும் மேற்பட்ட தியாகராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்றார். கிரியேட் அமைப்பின் தலைவர் முனைவர் துரைசிங்கம் தலைமை தாங்கி நெல் திருவிழாவின் நோக்கங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து கடந்த 18 ஆண்டுகளில் நெல் திருவிழா மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதையை கிரியேட் அமைப்பு வழங்கியுள்ளதை பற்றி கூறினார். பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிரியேட் அமைப்பின் “வெற்றிக்கு வித்திடும் இயற்கை வேளாண்மை” புத்தகத்தை வெளியிட்டார். பாரம்பரிய நெல் சாகுபடி நன்மைகளான கலை கட்டுப்பாடு, பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் செயல்திறன், அதன் ஊட்டச்சத்து, மற்றும் மருத்துவ பயன்கள் குறைந்த கிளைசெமிக் குறியீடு, மற்றும் மண்வள மேம்பாடு ஆகியவற்றில் அதன் நேர்மையான தாக்கத்தை பற்றி கூறினார். மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண்மை துறை விவசாயிகளுக்கு வழங்கும் மானிய திட்டங்கள் பற்றி பேசினார். மாவட்ட வள பயிற்றுனர் பரணிதரன் விவசாயிகள் சாகுபடிக்கு பின் தங்கள் விளை பொருட்களை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல் முறை குறித்து விரிவாக எடுத்து கூறினார். விழாவில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ஆத்தூர் கிச்சலி சம்பா, காலாபாத், குதிரைவால் சம்பா, பூங்கார், சீரகச் சம்பா, கருங்குருவை, சொர்ண மசூரி, ரத்தசாலி, அறுபதம் குறுவை, வெள்ளை கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களில் ஏதேனும் ஒன்று தலா 2 கிலோ வழங்கப்பட்டன.