அடுத்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் பிரிட்டிஷ் காலம் முதலாகவே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 15 முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2021ம் ஆண்டே நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது தள்ளிவைக்கப்பட்ட நிலையில் 3 ஆண்டுகள் கடந்தும் இன்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாமலே உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிப்பதற்கான தீர்மானத்தில் மத்திய அரசு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது மக்களிடம் அடிப்படை வசதிகள், அரசு திட்டங்கள் மூலம் பெற்ற பயன்கள் உள்ளிட்டவை குறித்தும் 31 கேள்விகள் கேட்க தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. சேகரிக்கும் புள்ளி விவரங்கள் அதற்கடுத்த ஆண்டு 2026ல் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதியவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், அதுகுறித்து மத்திய அரசு ஏதாவது முடிவு எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து விரைவில் மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு
