• Sat. May 4th, 2024

நாட்டரசன்கோட்டை பெருமாள் வெண்பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்

இன்று சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, நாட்டரசன் கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் பெருமாள் வெண் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார்.
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு பெருமாள் பூபாளம் ஆற்றில் இன்று செவ்வாய்க்கிழமை இறங்கினார்.
நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி உற்சவ விழா திங்கள்கிழமை (ஏப்.15 ) அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி ஆகிய பூஜைகளுடன் முகூர்த்தக்கால் ஊன்றியதுடன் தொடங்கியது. இதையடுத்து, திங்கள்கிழமை(22.4.2024) காலை திருமஞ்சன வைபவம், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் பூபாளம் ஆற்றில் இறங்கும் விழா இன்று செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் பெருமாள் வெண் பட்டு உடுத்தி வெள்ளிக்குதிரை வாகனத்தில் கோயிலிருந்து புறப்பட்டார். அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணியளவில் பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துடன்  பூபாளம் ஆற்றில் பெருமாள் இறங்கினார்.

விழாவில், சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, நடராஜபுரம், பையூர், கொல்லங்குடி, காளையார்கோவில், மதகுபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானத்தின் தேவஸ்தான மேலாளர் பா.இளங்கோ, கோயில் கண்காணிப்பாளர் பி.சரவணகணேசன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *