நாகப்பட்டினம், இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று துவங்க இருந்த நிலையில் தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகம் வரை 2023, அக்.14-ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழைப் பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த சேவை அதே மாதம் 23-ம் தேதி நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு, சுபம் என்ற கப்பல் நிறுவனம், ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்தாண்டு ஆக.16-ம் தேதி முதல் நாகை- காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கியது. வாரம் 5 நாட்கள் இந்த சேவை வழங்கப்பட்ட நிலையில், கப்பல் சேவை கடந்த நவ.18-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், வானிலை சீரடையாததால் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கப்பல் போக்குவரத்து இன்று (பிப்ரவரி12) முதல் தொடங்கும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கப்பல் சேவை தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.