• Tue. Dec 10th, 2024

புதுச்சேரியில் நாய்க்கு புலி வேஷம் போட்ட மர்மநபர்கள்

Byவிஷா

Apr 27, 2024

புதுச்சேரி குறிஞ்சி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நாய்க்கு புலி வேஷம் போட்ட மர்ம நபர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் சிலநாட்களுக்கு முன் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் புலி உலாவுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது. ஆனால், சில மர்ம நபர்கள் தெரு நாயின் உடலில் புலியைப் போலவே அழகான கோடுகளை வரைந்து, வண்ணமிட்டு உலவவிட்டது தெரியவந்தது. புலி வேஷம் போடப்பட்ட நாய், கடந்த 2 நாட்களாக குறிஞ்சி நகர் பகுதியில் உலா வருகிறது.
இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு, நாய்க்கு புலி வேடமிட்ட ஆசாமிகளைத் தேடி வருகின்றனர். அதே நேரத்தில், புலி வேடமிட்ட நாயை துரத்தி, அதை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அரசை விமர்சித்து வருகின்றனர்.