• Mon. Apr 29th, 2024

இஸ்லாமியர்கள் வருங்கால சந்ததியினருக்கு.. கல்வி என்ற ஆயுதத்தை கொடுங்கள்.., தமிழ்நாடு சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு..!

ByKalamegam Viswanathan

Oct 9, 2023
இஸ்லாமியர்கள் வருங்கால சந்ததியினருக்கு கல்வி என்ற ஆயுதத்தைக் கொடுங்கள் என தமிழ்நாடு சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். 
மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் சார்பில் மிலாடி நபி மாநாடு  வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் தலைவர் எம்.அப்துல்காதர் தலைமை வகித்தார். செயலர் .நிஷ்தார் அகமத், ஒருங்கிணைப்பாளர் எம்.பிஸ்மில்லாக்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட அரசு காஜி எம்.சபூர்முகைதீன் துவக்க உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் வாரியத்தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் சிறப்புரை ஆற்றி பேசியதாவது..,
இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கிறது, மக்களை மதம் மாற்றம் செய்கிறது,   விஞ்ஞானத்திற்கு எதிரானது, பெண்களுக்கு உரிமைகளை வழங்காதது, தேசப்பற்று இல்லாதது என பொய் பிரச்சாம் செய்து மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். உலகில் பில்லியன் கணக்கில் வியாபாரம் செய்யப்படும் போதை பொருள்கள், மது, ஆயுதம், வர்த்தகம், விபச்சாரம், சூதாட்டம் உள்ளிட்டகளுவைகளுக்கு எதிரானது இஸ்லாம் கோட்பாடுகள். இந்த வியாபாரத்தை தடுப்பதற்கு வலுவான கருவியாக இஸ்லாமிய கோட்பாடுகள் உள்ளன. இந்திய சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்களின் பங்கு மகத்தானது. புதுதில்லியில் சுதந்திரத்திற்காக இன்னுயிரை விட்டவர்களின் பெயர் பட்டியல் 90 ஆயிரத்திற்கும் மேலாக இந்தியா கேட்டில் பொறிப்பட்டிருக்கும். அதில் 60 ஆயிரம் பேர் இஸ்லாமியர்கள். தற்போது வாக்கு வங்கி அரசியலுக்காக நம்மிடையே வெறுப்புணர்வை தூண்டி விடுகின்றனர். இது அனைவருக்குமான தேசம். தர்மம் தோற்று அதர்மம் வந்ததாக புராணங்களிலோ, இதிகாசங்களிலோ இல்லை. நமக்கு ஒற்றுமை அவசியம். 
இஸ்லாமிய பெற்றோர்கள் வருங்கால சந்ததியினருக்கு கல்வி என்ற ஆயுதத்தை கொடுக்காவிட்டால் வரலாறு உங்களை ஒருநாளும் மன்னிக்காது. பெண் கல்வி இல்லாத சமூகம் முன்னேறாது. பெண் கல்விகுறித்து சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இஸ்லாமிய சமூகம் வந்திருக்கிறது. சூரியனுக்கு செயற்கைகோள் அனுப்பியதில் இஸ்லாமிய பெண் விஞ்ஞானிக்கும் பங்கு உண்டு. பங்களா தேசத்தில் இஸ்லாமிய பெண் பிரதமராக உள்ளார். பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, சவுதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெண்கள் மத்தியில் மறுமலர்ச்சி வந்துள்ளது. சுனாமி, கரோனா போன்ற பேரழிவு காலங்களில் இஸ்லாமிய இளைஞர்களின் பங்கு மகத்தானது.   இந்த நாட்டின் உண்மையான குடிமக்களாக எழுந்து நிற்போம்.  வலதுசாரி மதவாத வெறுப்பு அரசியலை விரட்டியடிப்போம் எனறார் 
விழாவில் நீட் தேர்வு ரத்து, வரும் மக்களவை தேர்தலில் தமிழகம், பாண்டிச்சேரி உள்பட உள்ள 40 தொகுதிகளில் குறைந்தது 4 வேட்பாளர்களை இஸ்லாமியர்களாக நிறுத்த வேண்டும் என அனைத்து கட்சிகளுக்கும் கோரிக்கை, தமிழக அரசு வீட்டுவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, உள்ளிட்டவைகள் திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் போடப்பட்டன.  பீர்முகமது பார்கவி, துணை மேயர் நாகராஜன், எம்.ஆரிப்கான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *